மாவட்டத்தில் 7 மையங்களில் மாநில வளர் திறன் தேர்வு: 4,552 மாணவர்கள் பங்கேற்பு

Update: 2023-09-25 11:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடைபெற்ற வளர் திறன் தேர்வில், 4,552 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

சர்வதேச அளவில், கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கும், வளர் திறன் தேர்வு, பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் மாகாணத்தில் வரும், 2024 ல் நடக்கிறது. அதையொட்டி, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், தங்களுடைய தொழில்நுட்பத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதை கண்டறியும் வகையில், மாநில வாரியாக, வளர் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, மாநில அளவிலான வளர் திறன் தேர்வு, நிலை 1 தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி, டிரினிடி மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடைபெற்றது.

மொத்தம் 7 தேர்வு மையங்களில், 229 அறைகள் தயார் செய்யப்பட்டிருந்தது. அதில் 4,552 தேர்வர்கள் பங்கேற்றனர். மாநில அளவிலான தேர்வை அடுத்து, தேசிய அளவிலும், அதையடுத்து, சர்வதேச அளவிலும் வளர் திறன் தேர்வுகள் நடத்தப்படும். வளர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்றால் ரூ. 75 ஆயிரம் ஊக்கத் தொகையும் கிடைக்கும் என உயர் கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News