மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வருடமும் மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் அன்னை தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம், சென்னை – 34 ல் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 07.10.2023 முதல் 20.10.2023 வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களான கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், பனை ஓலைப் பொருட்கள் போன்ற பொருட்களும், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பயன்பாட்டிற்கு கொலு பொம்மைகள், மண் பொம்மைகள், காதிக கூழ் பொம்மைகள், விருந்தினருக்கு வழங்கக் கூடிய நினைவு பரிசு (Return Gift) பொருட்களான சிறிய சணல் பைகள், பனையோலை பெட்டிகள், சிறிய அளவிலான வண்ண காகித பைகள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், காட்டன் வேட்டிகள் போன்ற துணி வகைகள், சிவகங்கை மாவட்ட காரைக்குடி பலகாரங்கள் போன்ற தீபாவளி பலகாரங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால் 20.09.2023-ம் தேதிக்குள் https://exhibition.mathibazaar.com/login என்ற இணையதளத்தில் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.