நிர்மலாவுடன் திடீர் சந்திப்பு : கோவை அதிமுக எம்.எல்ஏக்கள் பாஜகவில் சேர திட்டமா?

Update: 2023-10-03 10:00 GMT

அதிமுக பாஜக

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எந்த கூட்டணி உடையும், எந்த கூட்டணி நிலைக்கும் என்று கணிக்க முடியாத நிலையில், கோவை அதிமுக எம்எல்ஏக்கள் பாஜக ஆதரவாளர்களாக மாறப் போகிறார்களா? என்று தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி விரிவாக காண்போம்.

வலுவான தலைமை இல்லாத அதிமுகவை கரைத்து, அக்கட்சியினரை தங்கள் பக்கம் இழுத்தால் தான் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது. சர்வ அதிகாரத்துடனும், அசுர பலத்துடனும் இருக்கும் பாஜகவுடன் மோதி ஜெயிக்க முடியாத அதிமுகவை தங்களது நிரந்தர கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பாஜக நினைக்கிறது. இதன் காரணமாக அதிமுகவின் ஆளுமையாக இருந்த ஜெயலலிதாவையும், திமுகவின் பிதாமகனாக இருந்த அண்ணாவையும் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த மோதல் வெடித்துச் சிதறியதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக தற்போது விலகியுள்ளது. அதிமுக தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் சென்னையில் அண்ணாமலை இன்று  ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கோவையில் நடை பயணத்தில் இருந்த அண்ணாமலை நேற்று முன்தினம் திடீரென அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கட்சிப் பணியில் இருந்து முழுமையாக விலகினால், முழு நேர விவசாயியாக மாறுவேன் என்றும், தலைவர் பதவி வெங்காயம் மாதிரி, உரிச்சி உள்ளே பார்த்தால் எதுவும் கிடையாது என்றும் அவர் விமர்சித்தார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். அதிமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தது தொடர்பாக அண்ணாமலையிடம் அவர்கள் கேள்வி எழுப்பியதுடன், ஆக்கப்பூர்வமான தலைமையாக செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று மாலை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணி முறிவால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதிமுக இல்லாமல், பாஜகவால் பலமான கூட்டணி அமைக்க முடியுமா என்பது குறித்தும்,நிர்மலா சீதாராமனிடம் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக அளிக்க இருக்கிறார். இதற்கிடையே, கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கடன் வழங்கும் முகாமில், மூவாயிரத்து,749 கோடி மதிப்பிலான கடனுதவிகளை, பிரதமரின் கடன் திட்டங்களின் கீழ், வழங்கும் விழாவில் பங்கேற்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றிரவு டெல்லியில் இருந்து கோவை வந்தார். அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். கூடை கூடையாக பூக்களை தலையில் கொட்டி அப்படி ஒரு பிரம்மாண்ட வரவேற்பை பாஜகவினர் கொடுத்தனர்.

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் கோவையில் நிர்மலா சீதாராமனை இன்று சந்தித்து பேசினர். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமையில்  முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணியின் ஆதரவு எம் எல் ஏக்களான வால்பாறை அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் A.K.செல்வராஜ் ஆகியோர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணியின் ஆதரவு எம் எல் ஏக்களான 4 பேர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர்கள் நால்வரும் பாஜக ஆதரவாளர்களாக மாறுவார்களோ என்ற தகவலை பாஜக பரப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரது வீட்டில்  மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். இவர் ஏற்கனவே மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனியாக இயங்கி வருபவர். திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இருப்பதால், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுகவுடன் சேர்ந்தால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு அதிமுக முக்கியத்துவம் அளிக்கும் என்று தமிமுன் அன்சாரி கணக்கு போட்டுள்ளார்.

அதிமுக கூட்டணிக்குள் இஸ்லாமிய கட்சி ஒன்று வருவது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News