"நான் ரெடி தான்" என மாஸ் காட்டும் விஜய் - ஒரே ஒரு வீடியோவால் குஷியான ரசிகர்கள்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினரல்ர் சேர்க்கையை அறிவித்த நடிகர் விஜய்.
சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைக்க வாருங்கள் தோழர்களே என்று தனது கட்சியில் உறுப்பினர்களாக சேர அழைப்பு விடுத்து நடிகர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் அடுத்தக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழ வெற்றிக் கழகத்தில் 2கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வார்டுகளிலும் கட்சி உறுப்பினர்களை சேர்க்க செயலி அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்க 5 பேர் கொண்ட அணியை அறிவித்த விஜய், அதன் மாநில செயலாளராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமியை நியமித்தார்.
இந்த நிலையில் மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை தான் பெற்றுள்ளதாகவும், மற்றவர்கள் கட்சியில் உறுப்பினராக இணைய பேஸ்புக், வாட்சப் மற்றும் இன்ஸ்டகிராம் கியூஆர் கோடை அறிமுகம் செய்தார்.
இது தொடர்பாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்ட விஜய், இது எங்களுடைய ஐடி கார்டு. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டை. நான் எடுத்துக்கொண்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வரப்போகும் சட்டமன்ற தேர்தலை நோக்கி, என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட கட்சியின் உறுதிமொழியை படியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் விருப்பப்பட்டால் உறுப்பினராக சேருங்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி குறிப்பிடப்பட்டு, "தோழர்களாய் ஒன்றிணைவோம் தமிழ்நாட்டு மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாக ஒன்றிணைந்து மக்கள் பணி செய்ய விரும்பினால், கட்சியின் உறுதி மொழியை படித்துவிட்டு கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை க்யூ ஆர் கோட் இணைப்புகளை பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
உறுப்பினர் சேர்க்கை குறித்து விஜய் அறிவித்ததும் போட்டிப்போட்டுக் கொண்டு கட்சியில் இணைய அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.