ஆதவ் அர்ஜுனா கட்சி பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா கட்சி பொறுப்பில் தான் இருக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, எழுத்தாளரும், சமூக உரிமை போராளியுமான ஆனந்த் டெல்டும்ப்டே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை.2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது" என்று பேசியிருந்தார். துணை முதல்வர் உதயநிதியை தான் ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார் என்று கூறப்படுவதால் விசிக - திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்க சொன்னதே நான்தான். விசிகவில் தலித் அல்லாதோர் உள்பட 10 பேர் துணை பொதுச் செயலாளர்களாக உள்ளனர். ஆதவ் அர்ஜுனா தற்போதும் கட்சி பொறுப்பில் தான் இருக்கிறார், தொடர்பிலும் இருக்கிறார். ஒரு முறைக்கு இரு முறை பரிசீலித்த பிறகே ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.