சென்னையில் நாளை அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்!!
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (15-ந் தேதி) நடைபெறுகிறது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டிருந்த நிலையில் அது கை கூடாமல் போய்விட்டது. இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதே நேரத்தில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இது போன்ற பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (15-ந் தேதி) நடைபெறுகிறது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர், சிறப்பு அழைப்பாளர்களான கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 2 ஆயிரம் பேர் என 5 ஆயிரம் பேர் நாளை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்துக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்கிறார்கள். வழி நெடுக தோரணங்களும், அ.தி.மு.க. கட்சி கொடிகளும் கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கு கட்சியினர் தயாராகி வருகிறார்கள். பொதுக்குழுவில் பங்கேற்பவர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.