”முதலமைச்சராக இருந்தாலும் ஒரு நபரால் ஆட்சி நடத்த ரொம்ப கஷ்டப்பட்டேன்” - எடப்பாடி பழனிசாமி

"அதிமுகவில் நான் தவழ்ந்து தவழ்ந்து வந்து தான் பதவி உயர்வுக்கு சென்றேன் என்று ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசினார்"

Update: 2024-01-08 05:38 GMT
edappadi palaniswami

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

வரக்கூடிய மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை வண்டிப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் மதச்சார்பின்மை மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். 

மாநாட்டில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்த்தூவி எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ நான் முதலமைச்சராக ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. அதிமுகவில் நான் தவழ்ந்து தவழ்ந்து வந்து தான் பதவி உயர்வுக்கு சென்றேன் என்று ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசினார். அவருக்கு உழைப்பு என்றால் என்னவென்று தெரியாது, கருணாநிதியால் முதலமைச்சராகவும், திமுக தலைவராகவும் வந்துள்ளார். நான் நான் அப்படி இல்லை, கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து படிப்படையாக உயர்ந்தவன். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை, யாரையும் அடிமைப்படுத்தவும் இல்லை. 

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை முதலமைச்சர் ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அதிமுகவையும், பாஜகவையும் தொடர்புப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். மக்களை பற்றி கவலைப்படாமல், தனது குடும்பத்திற்காகவே திமுக கூட்டணி உள்ளது. 

நான் நான்கு ஆண்டு காலம் ஆட்சி நடத்துவதற்கு ரொம்ப துன்பப்பட்டேன். கட்சியில் இருந்து விலகி சென்ற ஒரு நபரை(ஓ. பன்னீர்செல்வம்) அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை” என கூறியுள்ளார். 

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டும் இல்லாமல் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் அதிமுக கட்சி தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News