அதிமுகவினா் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க தயாராகி விட்டனா் - கொமதேக E.R.ஈஸ்வரன் பேட்டி

காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் - கொமதேக E.R.ஈஸ்வரன் பேட்டி

Update: 2024-04-09 12:35 GMT
நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றிக்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சிறப்பாக அமைத்துள்ளனர். கர்நாடகா, தெலுங்கானா காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இதுவே இக்கூட்டமைக்கு நம்பிக்கை, ஊக்கத்தை கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, சமூக நலன் சார்ந்து உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை போல தேசிய அளவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையை கண்டு அதிமுக அமைதி இழந்தார்கள். அதைப்போல, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வந்தவுடன் அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியமில்லை எனக்கூறி பாஜக எதிர் கருத்துக்களை தெரிவிக்கிறது. கர்நாடகாவிலும் மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து காங்கிரஸ் கட்சி வழங்குகிறது. எனவே இந்திய அளவில் கொடுக்கின்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் தோற்றாலும் டெல்லியில் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் பெரிய நிறுவனங்களை, தொழிலதிபர்களை மிரட்டி வருகின்றனர். ஆனால் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். தமிழக முதல்வர் யார் பிரதமர் என்பதை உறுதி செய்வார். தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்கள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. பாஜகவின் அண்ணாமலையை பொருத்தவரை, வெற்று வாக்குறுதிகளை கூறுகிறார். மத்தியில் பாஜக ஆட்சி இருந்த போதிலும் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. எந்த திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தாமல் தற்போது தேர்தலை முன்னிட்டு வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். கோவையில் தற்போது தேர்தல் கள நிலவரம் வேறு மாதிரியாக இருந்த போதிலும் பாஜகவினர் தங்களுக்கு சாதகமாக கூறுகின்றனர். நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அனைவருடன் நன்கு பழகி வருபவர். ஒரு நல்ல வேட்பாளரை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம். எடப்பாடியின் தன்னிச்சையான செயல்பாடுகளால் அதிமுகவின் தீவிர தொண்டர்கள் உதய சூரியனுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். அதிமுகவின் தொண்டர்கள் விரும்பாத காரணமாகத்தான் பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் வெளியேறினார் என்று கட்சியினர் கூறுகின்றனர். தேர்தலுக்குப் பிறகு பாஜக-வை அதிமுக ஆதரிக்கும் என்ற நிலைப்பாடு உள்ளதால், அதிமுக தொண்டர்கள் கேள்வி கேட்கிறார்கள். தேசிய அளவில் வளர்ச்சி மற்றும் சமூக நீதி தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்துள்ளதற்கு அதிமுக மற்றும் திமுக காரணம். ஆனால் இன்றைய தினம் திமுக அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஒரு பொது எதிரியாக மோடி உள்ளார். எனவே இந்த தேர்தலில் பாஜகவை தமிழகத்திலிருந்து வீழ்த்துவோம் எனத் தொண்டர்கள் தெளிவாக உள்ளனர். தமிழக நலன் கருதி தேர்தலில் ஒற்றுமையாக, மோடிக்கு எதிராக ஓட்டு என்றால் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடும். நமது மாவட்டத்தைப் பொறுத்தவரை ராசிபுரம் , நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடையே திட்டங்கள் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. சங்ககிரியை நகராட்சியாக உயர்த்த உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இபிஎஸ் தடுமாறுகிறார். பாஜகவின் ஆட்சி, எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலை என்பதை அறியாமல் இபிஎஸ் பேசுகிறார். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று இபிஎஸ் இதுவரை கூறவில்லை. எனவே ஆதரிக்கிறார் என்று அர்த்தம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது டோல்கேட் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேரளாவில் பாஜகவிற்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை. இரண்டாவது இடத்திற்கு பாஜக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் அங்கு தனித்து நிற்கின்றனர்.மேற்குவங்கத்திலும் பாஜக வெற்றி பெறாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட இடங்களை வெற்றி பெறுவதாக பாஜக கூறுவது உண்மை இல்லை. தமிழகத்தில் விசைத்தறி, ஜவுளி தொழில்கள் வீழ்ச்சிக்கு காரணம் பாஜகவின் கொள்கைதான்.இந்த தேர்தலில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை என்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் நாமக்கலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், மாநிலத் துணைப் பொதுச் செயலாளரும்/ நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் A.K.P.சின்ராஜ் MP, கொமதேக நிர்வாகிகள் R.S.R.துரை, இரவிச்சந்திரன், அருள்மணி, குரு இளங்கோ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News