பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை; குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்!!
பாலியல் வன்கொடுமை செய்து பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த 26-ந்தேதி இரவு 7 மணிக்கு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பால் சங்கத்திற்கு பால் விற்பனை செய்வதற்காக சென்றவர் கொடியவர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நிர்மலா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், குற்றவாளிகள் யார் என்பது இதுவரை அடையாளம் கூட காணப்படவில்லை. தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது. திம்மவரத்தில் நிர்மலா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், முறையே 4, 3 வயது கொண்ட குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களில் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.