லஞ்சம் வாங்கிய ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யவேண்டும்: அன்புமணி
லஞ்சம் வாங்கிய ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது. இப்படித்தான் ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கையூட்டு வாங்கிய ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்வதுடன், அவரை பணியிடை நீக்கமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.