மிக்ஜாம் புயலால் மிதக்கும் சென்னை, மீட்பு பணியில் அமைச்சர்கள் !

Update: 2023-12-04 09:36 GMT

மிக்ஜாம் புயல் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னைக்கு தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியில் நிலைகொள்ளும்,5ஆம் தேதி நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்*

நாளை ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.

சென்னையின் பல்வேறு இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால்,

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சூறைக்காற்று வீசக்கூடிய பகுதிகளில் மின் கம்பங்கள் மூலமாக செல்லும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரான

சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர்,

கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட  அநேக இடங்களில் இடைவிடாமல் கனமழை பெய்கிறது.

பெருங்களத்தூர் அருகே பீர்க்கன்காரணை பகுதியில் மழைநீர் புகுந்து , இடுப்பளவு நீரில் சிக்கி தவித்த 15 பேரை படகு மூலம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.

சென்னை வேளச்சேரி அருகே அடுக்குமாடி கட்டடம் கனமழை காரணமாக தரையில் இறங்கியது கட்டடத்திற்குள்  சிக்கிய 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விடிய விடிய பெய்யும் கனமழையால் சென்னை புறநகர் மட்டுமின்றி மாநகரப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பல குடியிருப்புகளுக்குள் மழைதண்ணீர் புகுந்துள்ளது.

தாம்பரம் அரசு மருத்துவமனை, நந்தம்பாக்கம் ஈஎஸ்ஐ மருத்துவமனை தண்ணீரில் தத்தளிப்ப்பதால், நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

புயல் காரணமாக  வெள்ளநீர் தேங்கிய, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோட்டார்கள் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலையில் மீண்டும் வெள்ளநீர் தேங்கியதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். திரு.வி.க 2-வது தெருவிலும் வெள்ளநீர் குட்டைபோல் தேங்கியது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் அருகில் அவ்வை சண்முகம் சாலையும் தண்ணீரால் சூழப்பட்டு வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் இருந்தது.

தியாகராய நகர் பனகல் பூங்காவையொட்டி பகுதிகள், உஸ்மான் சாலை, அபிபுல்லா சாலை ஆகிய பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியது. நுங்கம்பாக்கம் பிரதான சாலையில் வெள்ளநீர் ஆறு போல் ஓடியது. மழைநீருடன், பாதாள சாக்கடை கழிவுநீரும் கலந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.. நுங்கம்பாக்கம் குளக்கரை சாலை 1-வது தெரு, நூர் வீராசாமி தெரு, ஜெயலட்சுமிபுரம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

புறநகர் பகுதிகளில் தொடர் மழையால் மூவரசம்பேட்டை ஏரி நிரம்பி அதன் உபரி நீர் கீழ்கட்டளை மற்றும் அதை சுற்றிய குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டது. இதனால் பிருந்தாவன் நகர், ஜெயலட்சுமி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் இதுவரை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை என்று புகார்கள் கூறப்படுகின்றன. இதேபோல், மடிப்பாக்கம் - மேடவாக்கம் பிரதான சாலையில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதுடன், மழைநீரும் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை அருகில் உள்ள சேரன் நகர் பகுதியில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சேரன்நகர் சாலை மோசமாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாயினர்.

மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர்  பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கின்றனர்.

அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர், முதல்வர் தொகுதி இடம்பெற்ற திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இன்று அதிகாலை  அமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

திருவல்லிக்கேணி பெரிய பள்ளி வாசல் - ஐஸ் ஹவுஸ் - அவ்வை சண்முகம் சாலை/பி.வி.இராமன் சாலை ஆகிய இடங்களில் மழை நீர் வடிவதற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை  அவர் கேட்டறிந்தார்..அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி ஊக்கப்படுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

மழை நீரை விரைவாக வெளியேற்றும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து

சேப்பாக்கத்தில் அமைந்துள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில், புயல் - மழை குறித்து ஆய்வு செய்த அவர், உதவி வேண்டி அழைப்புகளை மேற்கொள்ளும் பொது மக்களுக்கு உடனடியாக களத்தில் உள்ள அலுவலர்கள் உதவிகள்  செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அதிகாரிகள் - அலுவலர்களிடம் அமைச்சர் உதயநிதி எடுத்துரைதார்.

சென்னையில்  இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வ செய்தார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார்.

இதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் அனைவரும் மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பணியில் திமுக, அதிமுக சமூக ஊடக அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News