பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரச்சாரம்
கடைமடைப்பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.450 கோடியில் கல்லணைக்கால்வாய் புனரமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட கடைமடைப்பகுதியில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் 450 கோடியில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிகள் திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி பேசினார். இந்தியா கூட்டணி சார்பில்,
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி சனிக்கிழமை அன்று பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அலிவலம், உதயசூரியபுரம், இடையாத்தி, வாட்டாத்திக்கோட்டை திருச்சிற்றம்பலம்,
புனல்வாசல், ஒட்டங்காடு,கொன்றைக்காடு, செங்கமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்களை,
சாதனைகளைச் சொல்லி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு வந்துள்ளோம். தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப்பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள், கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் வழங்கி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறார்.
இலவச பேருந்துப் பயணத்தால், பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசிடமிருந்து போதிய நிதி கிடைப்பதில்லை. எனவே நம்முடைய கூட்டணி அரசு அமையுமானால் அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் பெரிய அளவில் வெள்ளச் சேதம் ஏற்பட்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிடம், தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டும், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த போதும், நிதி ஒதுக்க முன்வராத, பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராத, பிரதமர் மோடி தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பலமுறை வாக்கு கேட்டு தமிழகத்திற்கு வந்துள்ளார்.
ர தமிழக மக்கள் இதனை நினைவில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்பதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். பிரச்சார பயணத்தில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), நா.அசோக்குமார், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், ஆதரவு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விவசாயத் தொழிலாளர்கள் வரவேற்பு பிரச்சாரத்தின் போது, இடையாத்தி தெற்கு பகுதியில் வயல்வெளியில் நடவுப் பணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஈடுபட்டிருந்தனர். வேட்பாளர் முரசொலி பிரச்சார வேனை விட்டு கீழே இறங்கி, அங்கிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பாட்டுப்பாடுமாறு வேட்பாளர் முரசொலி கேட்கவே, அங்கிருந்த பெண்கள் குலவையிட்டு, "செல்லப்பிள்ளையாம், எங்கள் நல்லப்பிள்ளை, நல்லப்பிள்ளையாம், எங்கள் செல்லப்பிள்ளையாரே, விநாயகமூர்த்தியாரே...., என கிராமிய பாடலை பாடி உற்சாகமாக கைதட்டி, ஆரவாரம் செய்து, குலவை இட்டு, திமுகவுக்கு தான் எங்கள் வாக்கு என்று கூறி வரவேற்பு அளித்தனர்.