பொன்முடி தொகுதியில் இடைத்தேர்தலா..? - தேர்தல் ஆணையம் சொல்வது என்ன

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மார்ச் 13ம் தேதியில் இருந்து பொன்முடி திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார். அப்படி இருக்கும்போது இடைத்தேர்தல் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.

Update: 2024-03-16 12:42 GMT

திருக்கோவிலூர் இடைத்தேர்தலா..?

பொன்முடி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் பொன்முடியின் 3ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல் காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனால், அவரது திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டு மனுவில் பொன்முடியின் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதனால் பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளது.

இந்த சூழலில் லோக் சபா தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மார்ச் 13ம் தேதியில் இருந்து பொன்முடி திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.வாக தொடர்கிறார். அப்படி இருக்கும்போது இடைத்தேர்தல் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த செய்தியாளர்களை மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு விளக்கம் அளித்தார். அப்போது திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறாது என்றார்.ஆனால், கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்தார். இதனால், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எம்பி பதவியை விரும்பும் விஜயதாரணி காங்கிரஸ் மீது உள்ள அதிருப்தியால் பாஜகவில் இணைந்துள்ளார்.

Tags:    

Similar News