மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு – மீண்டும் பதற்றம் அதிகரிப்பு ! என்ன நடக்கிறது ?
மணிப்பூரில் பீகாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இத்துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, இரு சமூகத்தினர் சார்ந்த ஆயுத குழுக்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 200–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், காக்சிங் எனும் கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் புலம்பெயர் தொழிலாளர்களிடையே,பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தவுபல்மாவட்டத்தில் போலீசாருக்கும் 7 பேர் கொண்ட ஆயுத குழுவுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவங்களால், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.