கொடநாடு வழக்கில் காவல்துறை வெற்றி பெறவேண்டும் - டிடிவி தினகரன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்த வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Update: 2024-01-11 12:11 GMT

நாமக்கல் மற்றும் கரூர் மேற்கு மாவட்ட ஒருங்கிணைந்த சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வெற்றி பெற்றபோதும், அடுத்து நடைபெற்ற மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் முத்திரை பதிக்க முடியவில்லை. இருப்பினும், 2026–இல் ஆட்சியை பிடிக்கும் வகையில், திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தியாக அமமுக உருவெடுக்க வேண்டும். சிலர் சுயலாபத்திற்காக மாற்று கட்சியிடம் விலைபோகலாம். ஆனால் உண்மையான தொண்டர்கள் என்றும் அமமுகவில் தான் இருப்பர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி சரியில்லை என்று தான் திமுகவிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தனர்.

ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஒரு ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மாற்று சக்தியாக அமமுகவை தான் மக்கள் நம்பியிருக்கின்றனர். வரும் மக்களவை தேர்தலில் அமமுக மாற்று சக்தி என்பதை உணர்த்தும் வகையில் கட்சியினர் பணியாற்ற வேண்டும். நாம் போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் சிறப்பான ஓர் கட்டமைப்பை உருவாக்கி வெற்றியை பெற வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூட்டணியில் அமமுக இடம் பெறுமா என்பதை தற்போது சொல்வதற்கில்லை. பிரதமரை தேர்ந்தெடுக்கும் அணியில் இடம் பெறுவோம். தேனி தொகுதியில் நான் போட்டியிடுவதாக கூறும் தகவல் உண்மையில்லை. அது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது என்ன கொள்கையுடன் செயல்பட்டாரோ, அதேபோல் மக்கள் நலனுக்காக, அந்த கொள்கை வழியில் அமமுக நடைபோடும். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிவதில் காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்த வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்றார்.

இந்த கூட்டத்தில், நாமக்கல் மண்டல பொறுப்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு, தலைமை வகித்தார். நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.பழனிவேல், நாமக்கல் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.முத்துசரவணன், நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.பி.நல்லியப்பன்,‌ கரூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பிஎஸ்என்.தங்கவேல், மற்றும் மாநில கழக இளம் பெண்கள் பாசறை செயலாளர் பி.மேகலா, மாநில கழக இளைஞரணி துணைத் தலைவர் பி. ராஜ்குமார், மாநில கழக இளம் பெண்கள் பாசறை பொருளாளர் டி.பவானி துரைப்பாண்டியன், மற்றும் மாநில,மாவட்ட, நிர்வாகிகள் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நாமக்கல் வடக்கு, தெற்கு , மேற்கு, மற்றும் கரூர் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள், கிளை கழகம் ஊராட்சி கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News