விஜயகாந்த் மறைவு - பிரதமர் மோடி முதல் கட்சி தொண்டன் வரை இரங்கல்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-12-28 07:28 GMT

Vijayakanth

பிரதமர் மோடி இரங்கல்

”விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது தனித்துவமான நடிப்பு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு தலைவராக, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது கடினம்” - பிரதமர் மோடி

ராகுல்காந்தி இரங்கல்

”தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத தடம் பதித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”

அண்ணாமலை இரங்கல்

”விஜயகாந்த் தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர், தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்”

எடப்பாடி பழனிசாமி இரங்கல்

"பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்து, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் திரு.விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்”

ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

” விஜயகாந்த் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்த் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். புரட்சிக் கலைஞர், கேப்டன் என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். சாதி, மத பேதமின்றி ஏழையெளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்”

கமல்ஹாசன் இரங்கல்

"எனது அன்பிற்கினிய சகோதரர், தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர். தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர். எளியோருக்கு நீளும் உதவிக்கரம் கொண்டிருந்தவர். எதற்கும் அஞ்சாத துணிச்சல் அவரது அடையாளமாக இருந்தது”

நிர்மலா சீதாராமன் இரங்கல்

”மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் அவர்களை ‘பசிபிணி தீர்த்த பொன்மன வள்ளல்’ என்று அஞ்சலி செலுத்துவோம். அவரை இழந்துவாடும், அவரது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்"

சரத்குமார் இரங்கல்

”என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது” - சமக தலைவர் சரத்குமார் இரங்கல்

வைகோ இரங்கல்

”தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவு மிகுந்த துயரத்தை தருகிறது. நான்மாட கூடல் நகரில் வளர்ந்து தனது சொந்த முயற்சியாலும் உழைப்பாலும் திரை உலகில் உச்சத்தைத் தொட்ட உன்னத கலைஞர் அவர்” - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

”நல்ல திரைப்படக்கலைஞர், நல்ல அரசியல் தலைவர்... நல்ல மனிதர், நல்ல சகோதரர்... ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்”

டிடிவி தினகரன் இரங்கல்

”சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்த் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு”

வானதி சீனிவாசன் இரங்கல்

”தேமுதிக தலைவர் அருமைச் சகோதரர் கேப்டன் விஜயகாந்த் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன். அவரது மறைவு தாங்க முடியாத மன வேதனையைத் தருகிறது. தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டிருந்தாலும் திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் ஒரு பெரும் சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை”

ப.சிதம்பரம் இரங்கல்

”தேமுதிக தலைவர் விஜய்காந்த் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும் அக்கட்சியின் செயல் வீரர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். விஜய்காந்த் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்”

நாஞ்சில் சம்பத் இரங்கல்

“விளிம்புநிலை மக்களின் அன்புக்கு பாத்திரமானவர். ஈகைக் குணம் நிறம்பப் பெற்றவர்!சாமானியர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு வடிவம்தர தேமுதிக-வை நிர்மானித்தவர். இன்பத் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக கோலோச்சியவர்”

எம்.பி கனிமொழி இரங்கல்

“ எளிமை குறையாத மனிதராக, மக்கள் நலனுக்காகப் பொதுவாழ்வில் துணிச்சலாகச் செயலாற்றியவர். தலைவர் கலைஞரிடமும் எனது அம்மாவிடமும் அன்பு பாராட்டி, எங்களின் நலன் விரும்பியாக இருந்த அவரது மறைவு தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமன்றி எனக்கும் பேரிழப்பாகும்”

கவிஞர் வைரமுத்து

”எரிமலை எப்படிப் பொறுக்கும் என்ற என் பாடலுக்கு உயிர்கொடுத்த கதாநாயகன். அரசியலில் வல்லவர் சினிமாவிலும் அரசியலிலும் ‘டூப்’ அறியாதவர். . கலைவாழ்வு பொதுவாழ்வு கொடை மூன்றிலும் பாசாங்கு இல்லாதவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவரை நில்லென்று சொல்லி நிறுத்திவிட்டது காலம்”

ஏ.ஆர். முருகதாஸ் இரங்கல்

உங்கள் நினைவிக்கும், உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை. அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை இனி எப்போதும் காண்போம் கேப்டன். - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் பாரதி ராஜா இரங்கல்

”எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

Tags:    

Similar News