சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
சேவை பெறும் உரிமை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், அதிகாரிகளுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ''மனுக்கள் பெறப்பட்ட உடனோ, அதிகபட்சம் 3 நாட்களுக்குள்ளோ ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும்; மனுதாரரின் கோரிக்கையானது அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்க்கப்பட வேண்டும்; கோரிக்கை தீர்க்கப்பட்டிருந்தால் என்ன தீர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான விவரம், நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணம் ஆகியவை மனுவில் எழுதப்பட்டிருக்க வேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார். மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பரிந்துரைக்கும் ஒற்றைச் சட்டம் என்பது பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தான். தமிழகத்தில் பொதுச் சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள். இந்த அணுகுமுறையை விடுத்து சேவை பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது. பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது. இன்னும் கேட்டால் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் கவர்னர் ஆற்றிய உரையின்போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த காலத்தில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருந்தால் 9-ந்தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.