வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்: ராமதாஸ்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பற்ற அரசின் மிக மோசமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தென்பெண்ணை ஆறு ஓடும் 4 மாவட்டங்களிலும் ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள ஒவ்வொரு வீட்டிலும் வெள்ளம் புகுந்ததால் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு மீட்புக் குழுவினரே இன்னும் செல்ல முடியாததால் அங்குள்ள மக்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை. 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களும், ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த இழப்புகளில் இருந்து மீள்வதற்கு அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகள் ஆகக்கூடும். அதிர்ச்சியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவே சில நாட்களாகும். சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், நிலைமை ஒவ்வொரு மணி நேரமும் மோசமடைந்து வருகிறது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். சாத்தனூர் அணையை நள்ளிரவில் திறந்து பேரழிவை ஏற்படுத்தியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார்? என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும். மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.