தள்ளாடும் இந்தியா கூட்டணி.. தாங்கி பிடிப்பாரா ஸ்டாலின்?
5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது, காங்கிரசின் தன்னிச்சையான போக்கு தான் இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி விரிவாக காண்போம்.
வருகிற மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்கும் முடிவுடன் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஜூன் மாதம் இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் ஜூலையில் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மும்பையிலும் நடைபெற்றது. இம்மாத இறுதியில் அடுத்தக் கட்ட கூட்டம் நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள், இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகின. அரசியலில் நேரெதிர் துருவமாக இருக்கும் காங்கிரசுடன் நீண்டகாலம் பயணிக்க முடியாது என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்து அதிரடியை கிளப்பியது. இதே போல் மேற்குவங்கத்தில் அரசியல் எதிரியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுடன் கைகோர்த்து தேர்தலை சந்திப்பது ஆபத்தாக அமையும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தலை சந்திப்பது தங்கள் கட்சிகளின் எதிர்காலம் பாதிக்கும் என்று சமாஜ்வாதி கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் ஏற்கனவே தெரிவித்திருந்தன.
5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும்தான், சட்டசபை தேர்தல்களுக்கு அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தியது போன்ற செயல்பாடுகள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்தன. 5 மாநில தேர்தல் பிரச்சாரங்கள் கூட அதே போன்று இருந்தது. காங்கிரஸ் கட்சி தன்னை முன்னிலைப் படுத்துவதிலேயே கவனம் செலுத்தியது. இந்த நிலையில்தான் 5 மாநில தேர்தலில் வெற்றிபெற்று அசுர பலத்துடன் பாஜக உள்ளது. இதன் மூலம் இந்தியா கூட்டணி வெற்றி பெற ஒற்றுமை அவசியம் என்பதை எதிர்கட்சித் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். அதற்கு காரணம், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே உள்ள குறைந்த வாக்குசதவீதம் தான்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 1 கோடியே 75 லட்சத்து 64 ஆயிரத்து353 வாக்குகள் பெற்றது. பாஜக 2 கோடியே 11 லட்சத்து,13 ஆயிரத்து 278 வாக்குகள் பெற்றது. மொத்தத்தில் காங்கிரஸ் 40.40 சதவீத வாக்குகளையும் பாஜக 48.55 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் - 1 கோடியே 56 லட்சத்து 66 ஆயிரத்து 731 வாக்குகளை பெற்றது. பாஜக ஒரு கோடியே,65 லட்சத்து 23 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்றது.மொத்தத்தில் காங்கிரஸ் 39.53 சதவீத வாக்குகளையும் பாஜக 41.69 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் -92 லட்சத்து 35 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்றது. பாஜக 32 லட்சத்து 57 ஆயிரத்து 511 வாக்குகள் பெற்றது.மொத்தத்தில் காங்கிரஸ் 39.40 சதவீத வாக்குகளையும் பாஜக 13.90 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.
இதே போல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் 66 லட்சத்து இரண்டாயிரத்து 586 வாக்குகள் பெற்றது. பாஜக - 72 லட்சத்து 34 ஆயிரத்து 968 வாக்குகள் பெற்றது.மொத்தத்தில் காங்கிரஸ் 42. சதவீத வாக்குகளையும் பாஜக 46.27 சதவீத வாக்குகளையும் பெற்று இருக்கிறது.
இன்னும் குறிப்பிட வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சிக்கு 4.91 கோடி வாக்குகள் கிடைத்துள்ளது. பாஜகவுக்கு
4.8 கோடி வாக்குகள் கிடைத்து இருக்கிறது. பாஜகவை விட காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றபோதிலும், ஆட்சியமைக்க முடியாமல போனதற்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்காமல் விட்டது தான் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
நாடு முழுவதும் பலவீனப்பட்டு போன நிலையிலிருந்த காங்கிரசு கட்சிக்கு பாரத்ஜோடா பயணத்தின் மூலம் புது ரத்தம் பாய்ச்சி வைத்திருந்த வேளையில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளையும் அரவணைத்துச் சென்றிருந்தால், ராஜஸ்தானிலும் & மத்திய பிரதேசம் இவ்வளவு பெரிய தோல்வியை காங்கிரஸ் சந்திக்க வாய்ப்பில்லை.
பஞ்சாப்பின் விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஓராண்டுக்கு மேலாக போராடிய போது, அவர்களோடு கைகோர்த்தவர்கள் தான் ராஜஸ்தான் விவசாயிகள். போராட்டம் மிக கடுமையாக இருந்தது. ராஜஸ்தான் விவசாயிகள் சிலர் இறந்தும் போனார்கள். விவசாயிகளுக்கு எதிரானவர் மோடி என்கிற மனநிலையில்
ராஜஸ்தான் விவசாயிகள் இருந்தார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது,விவசாய சங்கங்களை ராஜஸ்தான் முதல்வராக இருந்த அசோக் கெலாட் அரவணைக்காமல், அந்தரத்தில் விட்டு விட்டார்.
காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் இடையிலான வாக்கு விகிதம் வெறும் 3.54 விழுக்காடு தான். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிபிஐஎம், சிபிஐ, சமாஜ்வாடி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளோடு களத்தில் நின்று இருந்தால் இந்நிலைமை காங்கிரசுக்கு வந்திருக்காது
மாயாவதியின் பிஎஸ்பி பிரித்த இரண்டு விழுக்காடு வாக்குகளும் காங்கிரசின் வாக்குகள் ஆகும் பாஜகவுக்கு இருக்கும் எதிர்ப்புகளை தாங்கள் மட்டுமே வாக்காக மாற்ற முடியும் என்கிற ஆணவ சிந்தனைகளும் தெளிவில்லாத பரப்புரைகளும் காங்கிரசை வீழ்த்தியது
ராஜஸ்தானில் காங்கிரசு என்ன தவறை செய்ததோ அதையேதான் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரிலும் செய்தது. வலுவான கூட்டணியை உருவாக்கிக் கொண்டு இடங்களை பகிர்ந்து கொண்டால் மட்டுமே இதுவும் சாத்தியம் என்கிற நிலைமை எதிர்காலத்தில் வரும்.
நாடு காங்கிரஸை விரும்புகிறது, இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும் என்று பேசப்பட்டாலும், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளூர் பகை மறந்து பாஜகவை வீழ்த்த திட்டமிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்ற கருத்துகளை மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள், கொள்கை அடிப்படையில் இயங்கி, தேர்தல் களத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்தது போல, இந்தியா கூட்டணி தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி உறுதியாகும். இந்த விஷயத்தில் ஈகோவை விட்டுக் கொடுத்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழியை இந்தியா கூட்டணி பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணியை தாங்கிப் பிடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைள் எழுந்துள்ளன.
வருகிற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இந்தியா கூட்டணி தேர்தலை சந்திப்பது பெரும் சவாலானது என்று மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் பிரதமர் யார் என்பதை அறிவிக்காமல் நாம் கைக்காட்டுபவர்தான் பிரதமர் என்று திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் அறிவித்திருப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்த வாய்ப்புகள் உள்ளன என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கூறியுள்ளனர்
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பலமான வேட்பாளர்களை மட்டும் களமிறக்கினால் போதாது, உத்திகளே தீர்மானிக்கும் என்பதை பாஜக உணர்ந்த அளவிற்கு காங்கிரஸ் இன்னும் உணரவில்லை என்பது எதிர்கால இந்தியாவிற்கு ஆபத்தாகவே பார்க்கமுடிகிறது.
2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம், 2024-ல் மோடி வென்றால் அது நாட்டுக்கு ராகு காலம் என்றும்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ராகுல் காந்தி மீண்டும் வடஇந்திய மாநிலங்களில் பாரத் ஜடோ யாத்திரை செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.