கேரளா செல்லும் முதல்வர் – கேரள முதல்வரிடம் பேசி தீர்வு காண்பார்!
சட்டப்பேரவையில் நேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலளிக்கையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள், ‘‘தமிழ்நாடு அரசின் முல்லைப் பெரியாறு பழுதுபார்ப்புப் பணியைத் தடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
அந்த விவாதம் வருமாறு:
எடப்பாடி கே. பழனிசாமி:முல்லைப் பெரியாறு அணையின் ஆண்டு பராமரிப்புப் பணிகள் ஒவ்வோராண்டும் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த வாரம் 4–12–2024 அன்று நம்முடைய பொதுப் பணித் துறை அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக 2 லாரிகளில் கட்டுமானப் பொருட்களை வனத் துறையின் வழியாகக் கொண்டு செல்கின்றபோது வல்லக்கடவு என்ற இடத்தில் அதைத் தடுத்து நிறுத்தி, அந்த வாகனம் செல்ல முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் அங்கு அந்த பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. கேரள அரசு அணை பராமரிப்புப் பணிக்கு இடையூறு செய்த காரணத்தினால் அந்தப் பகுதியில் இருக்கின்ற 5 மாவட்ட விவசாயப் பெருங்குடி மக்கள் அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஜான் பென்னி குயிக் நினைவிடத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் பகுதியில் கொந்தளிப்பான ஒரு நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் வருகிற 11 ஆம் தேதி கேரளாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்குச் செல்வதாக செய்திகளை நாம் பார்த்தோம். அதே நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சரும் அங்கு கலந்துகொள்கிறார்கள். ஆகவே, அவர்களிடத்திலே இதைப்பேசி, முல்லைப் பெரியாறு அணையி னுடைய ஆண்டு பராமரிப்புப் பணிகள் தொடருவதற்குண்டான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்:எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கொண்டு வந்திருக்கிற இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். காரணம், அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு உச்ச நீதிமன்றத்திலே தீர்ப்பு சொல்கிறபோது, தமிழ்நாடு அரசு முல்லைப் பெரியாறு அணையினை பழுதுபார்ப்பதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கும்போது, எந்த நடவடிக்கை எடுத்தாலும் கேரள அரசு அதைத் தடுக்கக்கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியிருக்கிறது. இது கேரள அரசுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். அவர்கள் இருக்கின்றபோதுகூட சிலநேரங்களில் இதுபோன்று நடப்பது உண்டு. பிறகு பேசி முடிப்பதுண்டு. எனவே, இது முடிந்தவுடனே கேரளத்தில் இருக்கிற அந்த நீர்வளத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறோம். இதனால் இரு மாநிலங்களுக்கிடையில் வேறுமுறையிலான தகராறுகள் வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறோம்.
அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னதைப்போல, நாளைக்கு முதலமைச்சர் அவர்கள் அங்கு போகிறார். நானும்தான் கூடப் போகிறேன். இதுகுறித்து பேசிவிட்டு வருவோமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.
வி.பி. நாகைமாலி:எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசுகிறபோது, கேரள அரசு இடையூறு செய்கிறது என்கிற ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.
அமைச்சர் துரைமுருகன்:நான் அதை ஏற்கெனவே குறிப்பிட்டேன். முல்லைப் பெரியாறு வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக சொன்னது; தமிழ்நாடு அரசு பழுதுபார்க்கப்போகிறபோது எதையும் தடுக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறது. தடுத்தால் அதற்கு என்ன பெயர்? அவர் சொல்வதுதான் பெயர்.
இவ்வாறு பேரவையில் விவாதம் நடைபெற்றது.