தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன் - ஸ்டாலின்

Update: 2024-08-27 13:30 GMT

ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

உலக முதலீடுகளை ஈர்க்க இன்றிரவு அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அமெரிக்கா முதலீடுகள் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, முதலமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி, மாநிலத்தின் பொருளாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு தொழில் துறை சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் செப் 2 ஆம் தேதி வரை சான்பிரான்சிஸ்கோவில் தங்கும் ஸ்டாலின் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் உலக முதலீட்டளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அதன்பிறகுசிகாகோ செல்லும் ஸ்டாலின் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை தங்கி முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.

ஆக்ஸ்ட் 31ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேசும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிறுவனர்கள் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுகிறார்.

இதற்கான முன்னேற்பாடுகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களாக கருதப்படும் ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள நிறுவன தலைவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார். தொடர்ந்து 7ஆம் தேதி அயலக தமிழர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பை மேற்கொள்கிறார். செப்டம்பர் 12ஆம் தேதி அமெரிக்காவில் அனைத்து நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்வர் தமிழகம் திரும்புகிறார். முதலமைச்சரின் இந்த பயணம் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, தங்கம் தென்னரசு ஆகியோரும் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளில் துபாய், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்திருக்கிறார். அவ்வாறு தமிழகத்திற்கு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.. 2023 மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1342 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை தரும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பெயினுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் 3440 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். குறிப்பாக ஹபக் லாய்ட் நிறுவனம் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், எடிபாக் நிறுவனம் 540 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதே போல துபாய் அபுதாபி பயணங்களின் போதும் 2000 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகளை ஈர்க்க ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மூன்று ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் மூலம் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இதுவரை 55 சதவீதத்திற்கு மேற்பட்ட முதலீடுகள் தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முயற்சி, தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் இந்தப் பயணத்தில் பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News