விஜய்யின் கனத்த மெளனம் .. காரணம் என்ன.. ஆச்சரியமாக பார்க்கும் அரசியல் கட்சிகள்.. ரசிகர்கள்

விஜய்யின் கனத்த மெளனம் .. காரணம் என்ன.. ஆச்சரியமாக பார்க்கும் அரசியல் கட்சிகள்.. ரசிகர்கள்;

Update: 2026-01-10 11:21 GMT

ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியாக வேண்டியது.. ஆனால் தணிக்கை சான்று பிரச்சனை காரணமாக வெளியாகாமல் போனது. பொங்கலுக்கு கூட வெளியாகாது என்பதை விஜய் ரசிகர்கள் ஏமாற்றமாக கருதுகிறார்கள். ஜனநாயகன் வரும் ஜனவரி 23ம் தேதி தான் அடுத்து ரிலீஸ் ஆகும் நிலை உள்ளது. ஏனெனில் அப்போது தான் ஜனவரி 24, 25, 26 என மூன்று நாட்கள் தொடர்விடுமுறை வருகிறது. படம் சென்சார் பிரச்சனையால் வெளியாகாமல் போக பாஜகவே காரணம் முதல்வர் ஸ்டாலினே விமர்சிக்கும் நிலையில், படத்தின் நாயகனனே விஜய் கனத்த மௌனத்தை ரசிகர்கள் மற்றும் கட்சிகள் ஆச்சரியமாக பார்க்கின்றன.

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந் தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த 6 மற்றும் 7-ந்தேதி விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா நேற்று காலை தீர்ப்பு அளித்தார். அப்போது, 'ஜனநாயகன்' படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் என்றும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவேண்டும் என்றும் கூறி, யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனர்.

அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது. அந்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், டிசம்பர் 22-ந்தேதி 'ஜனநாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைக்க தலைவருக்கு அதிகாரம் இல்லை. ஆகவே 'ஜனநாயகன்' படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றார்.இதையடுத்து தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். வழக்கையும் வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் ஜனநாயகன் ரிலீஸ் ஆவது 10 நாளைக்கு மேல் தள்ளிப்போயிருக்கிறது.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் எல்லாவற்றையும் திரும்பி தர வேண்டிய நிலை தியேட்டர்களுக்கு ஏற்பட்டது. பட தயாரிப்பு நிறுவனம் 500 கோடி முதலீடு செய்து எடுத்த படம் தற்போது மேலும் சில நாட்கள் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனம் கலங்கி போயிருக்கிறது.

இந்த விவகாரத்தில் விஜய் மற்றும் ஜனநாயகன் படத்திற்காக பலநடிகர், நடிகைகள் ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். ஏன் நேற்று முதல்வர் ஸ்டாலின் கூட குரல் எழுப்பினார். எதிர்க்கட்சியாக இருந்த போதும் குரல் எழுப்பி ஆச்சரியம் அளித்தார். ஆனால் படத்தின் நாயகனான விஜய், இன்று வரை பாஜகவிற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல்எழுப்பவே இல்லை.. இவர் ஆரம்பம் முதலே மத்திய அரசை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ குரல் கொடுக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதற்கு கூட குரல் கொடுக்காதது ஏன் என்று ரசிகர்களும், கட்சிகளுமே ஆச்சரியமாக பார்க்கின்றன.

Similar News