பசு மூத்திர மாநிலங்களா? டோஸ் விட்ட மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்ட திமுக எம்.பி!

Update: 2023-12-06 10:23 GMT

மு.க.ஸ்டாலின் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வட மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு செம டோஸ் விட்டதால் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றிய விரிவான செய்தித் தொகுப்பை காண்போம்.

அண்மையில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில்

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மிசோரமில் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைக்கிறது. இவை அனைத்தும் வட மாநிலங்கள் ஆகும். தெலுங்கானாவில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த மாநிலம் தென்னிந்தியாவைச் சேர்ந்தது. இத்தேர்தல் மூலம் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்களில் பாஜக ஆள முடியாத  நிலை உருவாகியுள்ளது. மேலும் வட இந்தியாவில் பாஜக செல்வாக்குள்ள கட்சியாக மாறிவிட்டது.

வட இந்தியா, தென்னிந்தியா அரசியல் விவகாரம் அனல் பறக்கும் நேரத்தில், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. தர்மபுரி திமுக மக்களவை உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார்,

நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து தெரிவித்த  கருத்து சர்ச்சையானது. அதாவது இந்தி பேசும் மாநிலங்களில் தான் பாஜக வெற்றி பெறுகிறது. இந்தி பேசுகிறவர்கள் தான் பாஜகவுக்கு வாக்களிக்கிறார்கள். அதனை பசு மூத்திர மாநிலங்கள் என்று தான் நாங்கள் அழைப்போம் என்று செந்தில்குமார் பேசியதால் கடும் எதிர்ப்பு உருவானது.

மேலும், தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய  தென்னிந்தியாவில் பாஜகவால் ஆட்சி அமைக்கவே முடியாது என்றும் டாக்டர் செந்தில்குமார் பேசினார். இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மட்டுமின்றி காங்கிரஸ் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரணமாக 5000 கோடி ரூபாயை முதல் கட்டமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் டாக்டர் செந்தில்குமாரின் இந்தி பேசும் மாநிலங்கள் பற்றிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனை அறிந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாகக் கண்டித்தார். நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கேளுங்கள் என்று செந்தில்குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அறிக்கை ஒன்றை  தமது X தளத்தில் டாக்டர் செந்தில்குமார் வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய தான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன் என்றும், எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று டாக்டர் செந்தில்குமார் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணா சுட்டிக்காட்டிய கடமை, கண்ணியம் ,கட்டுப்பாடு ஆகிய மூன்றையும் அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

எந்த முறைகேடு விவகாரங்களிலும் சிக்காமல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் எடுத்த தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், 24 மணிநேரமும் தொகுதி மக்கள் நலன் மீது அக்கறை செலுத்துபவர். சமுக ஊடகங்கள் மூலம் பல பேருக்கு உதவிகளையும், வேலைவாய்ப்புகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறார். ஆனால், மதம் சார்ந்த, மக்களின் நம்பிக்கை சார்ந்த விவகாரங்கள் பற்றி பேசும்போது, கொஞ்சம் முற்போக்கு சிந்தனையுடன் வெளிப்படையாக பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News