சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு வாயிலை பயன்படுத்தி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் !!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(16–ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
பக்தர்களுக்காக கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரி மலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் திரண்டு இருக்கும். மற்ற நாட்களில் அதிகாலை நடை திறக்கப்படும் நேரத்தில் மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள்,பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அவர்கள் பதினெட்டாம்படி ஏறிய பிறகு சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக முதல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரை தங்களுடன் இந்த வழியில் அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு வாயிலை பயன்படுத்தி இன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்தனர்.