குலம் தழைக்கும் காமாட்சி அம்மன் விளக்கு !!
காமாட்சி அம்மன் விளக்கு எல்லோருடைய வீட்டிலும் நிச்சயம் ஏற்றப்பட வேண்டிய தீபமாகும். இதில் ஒளிந்து கொண்டிருக்கும் தத்துவம் மிகவும் புனிதமானது. எத்தனை விளக்குகள் இருந்தாலும் ஒரே ஒரு காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வைத்தால் அத்தனை தெய்வங்களின் அருளையும் ஒரு சேர பெற முடியும் என்பது ஐதீகம்.
புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப் பந்தலை வலம் வரும் போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் காமாட்சியம்மன் திருவிளக்கு ஏந்திச் செல்கின்றனர். புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி" எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும். இதனால் புதுமண தம்பதிகளுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும், ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது இதன் தத்துவம்.
திருமண வைபவம் முடிவுற்றதும் மணமகள் மணமகன் வீட்டிற்கு முதன் முதலாக ஏற்றப்பட வேண்டியது தீபமும் இந்த காமாட்சி அம்மன் விளக்கில் தான். காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றிய பின் தான், குத்து விளக்கை ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம். இதனால் மணப்பெண்ணுக்கு அனைத்து தெய்வங்களின் அருளும், அந்த வீட்டின் குல தெய்வத்தின் அருளும் கிடைத்து குலம் தழைக்கும் என்பது நம்பிக்கை.பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.
காமாட்சி அம்மன் விளக்கை தினமும் ஏற்றி வழிபடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கப் பெறும். குலம் தழைக்கும், வறுமை நீங்கும், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும், செல்வ வளம் பெருகும், வழக்குகள் வெற்றியடையும், எதிர்ப்புகள் விலகும், குடும்பத்தில் சலக விதமாக மங்களமும் உண்டாகும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.