மஹாளயபட்ச அமாவாசை வழிப்பாடு !!
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனிப்பெரும் சிறப்பாக திகழ்கிறது.
அதிகாலையில் பெண்கள் குளித்துவிட்டு விரதம் இருந்து இறந்தவர்களுக்கும், முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை வைத்து விட்டு உண்பது ஐதீகம். படைத்து வைப்பவைகளை காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.
காக்கைகள் உண்டபிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவுமுறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிரியமானவர்கள் பயன்படுத்த வேண்டுமேயொழிய, பிறருக்கு தானமாகத் தரக்கூடாது.
அமாவாசை விரதமிருப்பவர் காலையில் சாப்பிடக் கூடாது. பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.