மலையாள மக்களின் இஷ்ட தெய்வமான பழநி முருகன் !!
மலை மீது தண்டாயுதபாணி, அடிவாரத்தில் திருவாவினன்குடி கோயில்கள் உள்ளன. 'பழம் நீ' என முருகனை அழைத்தவர் சிவன். அதனடிப்படையில் இத்தலம் 'பழம் நீ' எனப்பட்டது. தற்போது 'பழநி' என்றானது. சுவாமியின் இடது புறத்தில் மரகத லிங்கம் உள்ளது. வலதுபுறத்தில் இருந்து தீபம் காட்டினால் சிவலிங்கத்தை தரிசிக்கலாம். நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலையை உருவாக்க ஒன்பது ஆண்டுகள் ஆனது. நெற்றி, கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் உளியால் செதுக்கப்பட்டது போல இருக்கும்.
நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்த பிரசாதம் நோய்களை போக்க வல்லது. தினமும் ஆறுமுறை அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ,அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுவாமியின் மார்பில் சந்தனக் காப்பு இடுகின்றனர். இரவில் சிலையில் இருந்து நீர் வெளியேறுகிறது. இதை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து பிரசாதமாக தருகின்றனர். கருவறையைச் சுற்றி தெய்வீக மணம் கமழ்வது இத்தலத்திற்கே உரிய சிறப்பு. கேரளாவை நோக்கியபடி முருகன் இருக்கிறார். இவர் மலையாள மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார்.