தீபாவளி பண்டிகை உருவான புராண கதை !!
தீபாவளி பண்டிகை எதனால் கொண்டாடுகிறோம் என்று நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும்.அது] தான் நராகாசுரன் கதை. நரகாசுரனின் உண்மையான பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் என்று அழைக்கப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்று ஆனது.
இவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொலை செய்ய நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன் என்பதால் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார்.
சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அவரிடம் அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் கொண்டாட வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இதை கிருஷ்ண லீலை என்கிறது புராணம்.
வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் எல்லா மதமும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.