அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடு பயணம்!!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஐக்கிய நாடுகள் மாநாடு மையத்தில் நடைபெறும் 5 வது சர்வதேச இளைஞர் மன்ற கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.;
govt school students
சென்னை பரங்கிமலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக செல்லக்கூடிய மாணவ மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செயலாளர் சந்திரமோகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாநில கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான திறன் மேம்பாடு பயிற்சிகளை கொண்டு வந்துள்ளோம். இந்த நூற்றாண்டுக்கான அறிவியல் தேவைகள் மற்றும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் மாணவர்களுக்கான கல்வி தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் AI தொழில்நுட்பம், ரோபோடிக் உள்ளிட்டவை குறித்தும் அடங்கும். இதற்காக உலக தரத்திலான ஆய்வகங்கள் பல பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளை விட சிறப்பான கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். பாங்காக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் (UNCC) நடைபெறும் 5 வது சர்வதேச இளைஞர் மன்றத்தில், உலகளாவிய எதிர்காலத்திற்காக இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில், வரும் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்ய தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் 6 பேர் பங்கேற்க உள்ளனர்.இவர்கள் இன்று இரவு தாய்லாந்து செல்ல உள்ளனர். இதில் முக்கிய மைல்கல் ஐ.நா. வின் பொருளாதார மற்றும் சமூக சபையுடன் (ECOSOC) சிறப்பு ஆலோசனை அந்தஸ்து கொண்ட அமைப்பான, நிலையான மேம்பாட்டு கவுன்சில் ஏற்பாடு செய்த ஐ.நா.வின் மாணவர் கல்வி பயணத்தின் (SEEUN) ஒரு பகுதியாகும். கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்கள் தரமான கல்வி, பருவநிலை நடவடிக்கை, பாலின சமத்துவம், புதுமை மற்றும் தலைமைத்துவம், உலகளாவிய குடியுரிமை போன்ற பிரச்சினைகளில் இந்தியா இளைஞர்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர். மேலும் ஜி. ஆர். டி ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மாணவர்களை கருத்தரங்கிற்கு அழைத்து செல்வது குறிப்பிடத்தக்கதாகும்.