சென்னை சங்கமம் விழா - பீக்கில் விற்பனையாகும் "பீப்" உணவுப்பொருட்கள்

சென்னை சங்கமம் கலைத்திருவிழாவையொட்டி போடப்பட்டுள்ள உணவு ஸ்டால்களில், பீப் உணவுப் பொருட்கள் கிடைப்பது மக்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.;

Update: 2026-01-17 04:27 GMT

தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கலைத்திருவிழா ஜனவரி.14 அன்று (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பறை இசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திருவிழாவை, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ஒருங்கிணைத்து வருகிறார்.

'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், பல்லாவரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி,‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம். ராஜரத்தினம் விளையாட்டரங்கம், தி.நகர் நடேசன் பூங்கா, ராஜா அண்ணாமலைபுரம் - அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் மாநகராட்சி விளையாட்டு திடல், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான் பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, பல்லாவரம் கன்டோன்மெண்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம் ஆகிய 20 இடங்களில் ஜன.15 முதல் நாளை வரை (ஜன.18) நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறுகிறது.

சென்னை சங்கமம் கலைவிழாவில், உணவு மற்றும் கலைப் பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டுவருகிறது. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்காவில் போடப்பட்டுள்ள பீப் ஸ்டால்களில், பீப் உணவுப் பொருட்கள் விற்பனை களைகட்டுகிறது. மக்கள் ஆர்வத்துடன் பீப் உணவுப்பொருட்களை வாங்கிச் சுவைத்து மகிழ்கின்றனர். சென்னை சங்கமம் கலைத்திருவிழாவில் போடப்பட்டுள்ள பீப் ஸ்டால்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜன.14ம் தேதி தொடங்கிய சென்னை சங்கமம் கலைத்திருவிழா நாளை (ஜன.18)யுடன் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Similar News