கரூர் நெரிசல் குறித்து வதந்தி பரப்பிய பாஜ, தவெக நிர்வாகிகள் 3 பேர் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவு!!
கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் பிரச்சாரத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.;
vijay
கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் பிரச்சாரத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. கரூர் துயர சம்பவம் தொடர்பாக எந்த வதந்திகளையும் சமூக வலைத்தளத்தில் பரப்ப கூடாது என்றும், உரிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், கரூர் நெரிசல் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என கேட்டு கொண்டார். ஆனாலும் சிலர் சமூக வலை தளங்களில் கரூர் விவகாரம் தொடர்பாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் தவறான செய்திகளை பரப்பும் சமூக வலைத்தள கணக்குகள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் பொது வெளியில் அதாவது சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் கருத்துகளை பதிவு செய்த சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ள 25 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் பாஜக நிர்வாகியாக இருக்கக்கூடிய சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சகாயம், சென்னை ஆவடியை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகி சரத்குமார், மாங்காடு பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சிவனேசன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.பலரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி கைது செய்யப்பட்ட சரத்குமார், சகாயம் ஜேம்ஸ், சிவநேஸ்வரனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.