சேலத்தில் வாலிபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கழுத்தை அறுத்துக் கொண்ட வாலிபர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடந்தது. இந்த நிலையில் கருப்பு வேட்டி மற்றும் கருப்பு சட்டை அணிந்தபடி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சொத்து பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேறு வேட்டி சட்டை அணிந்து வரும்படி கூறி அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் சற்று தூரத்திற்கு சென்ற அந்த வாலிபர் கத்தியால் திடீரென தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டார்.
பின்னர் ரத்தம் வடிந்த நிலையில் சத்தம் போட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த வாலிபர் கலெக்டரை தான் நான் பார்க்க வேண்டும் . ஆஸ்பத்திரிக்கு எதற்காக செல்ல வேண்டும் என்று கூறியபடி ரகளையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.