திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழா!
திருச்செந்தூரில் திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழா: திரளானோர் பங்கேற்பு
Update: 2024-07-08 06:07 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் திருநங்கைகளுக்கு இல்ல பால் ஊற்றும் விழா நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்ட திருநங்கைகள் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்தனர். இறைவன் படைப்பில் சிறப்பம்சமாக கருதப்படும் திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்து வருகின்றனர். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரிக்கப்படும் இவர்கள் சமுதாயத்தில் சரிசமமாக மதிக்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறி வருகின்றனர்.ஆணாக பிறந்து வளர்ந்து முழுமையாக பெண்ணாக மாறிட அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகள் 40 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு இல்ல பால் ஊற்றும் விழா என்ற சடங்கு நடத்தப்படுகிறது. திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் கற்பகம், ஷிவானி, சிலுக்கு ஆகியோருக்கு இல்ல பால் ஊற்றும் விழா, திருச்செந்தூர் தனியார் மண்டபத்தில் நடந்தது. செந்தூர் திருநங்கையர் நலச்சங்க தலைவர் சியாமளா தலைமை தாங்கினார். போத்திராஜ் மாதா என்று அழைக்கப்படும் சந்தோஷி மாதாவுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.