கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு மீண்டும் தடை!!
கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அதிகாரிகள் மீண்டும் தடை விதித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது. இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளி ப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம். இதையடுத்து தீபாவளி விடுமுறையையொட்டி கொடிவேரி தடுப்பணையில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கொடி வேரிக்கு வந்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர். இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு சுமார் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது. மேலும் நம்பியூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கொடிவேரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதை தொடர்ந்து தடுப்பணையில் தண்ணீர் அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது. இதையொட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் இன்று அதிகாரிகள் மீண்டும் தடை விதித்து உள்ளனர். இதையடுத்து கொடிவேரி அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு அணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பணியாளர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே கொடிவேரி அணைக்கு வந்து இருந்தனர். அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.