உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரி தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தொழிற்பூங்காவில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், தொழில் நிறுவனத்தை விரிவுபடுத்தும் டாடாவின் பணியை பார்த்து மகிழ்ச்சியடைகிறோம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் டாடா கார் உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதல் முகவரியாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய நிறுவனங்களுக்கும் தமிழகம் தான் முதல் முகவரியாக உள்ளது. தமிழகம் மீது டாடா வைத்துள்ள நம்பிக்கைக்கு பெருமிதம் கொள்கிறோம். தமிழகத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும்போது உங்களுடன் சேர்ந்து நாங்களும் பெருமைபடுகிறோம். இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் முக்கியமான டாடா நிறுவனம் உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. டாடா நிறுவனத்திற்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டு கால தொடர்பு உள்ளது. உலகளவில் செயல்படும் டாடா நிறுவனம் தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைவது கூடுதல் மகிழ்ச்சி. பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.