சென்னை தலைநகர் திருச்சிக்கு மாற்றமா...? - பாஜகவுக்கு நச்சென பதிலடி கொடுத்த அமைச்சர்கள்!

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை சிரிக்க வைத்த வானதி சீனிவாசன்

Update: 2024-02-15 06:02 GMT

TN Assmbly

மக்கள் தொகை அதிகரிப்பதால் சென்னை தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என்ற பாஜக எம்.எல்.ஏ.நயினார் நாகேந்திரனின் கோரிக்கைக்கு, தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழக மரபுப்படி சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகள், அரசு கொண்டு வரும் தீர்மானங்கள், பட்ஜெட், தொகுதி வாரியான பிரச்சனை குறித்து விவாதங்கள் நடைபெறுவதுடன், ஆளும் கட்சியை எதிர்கட்சி கேள்வி கேட்பதும், அதற்கு ஆளும் அரசு பதிலளிப்பதும் வாடிக்கையானது. சில நேரங்களில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்களு, வாக்குவாதங்களும், சட்டையை கிழிக்கும் அளவுக்கு சண்டைகளும் கூட அரங்கேறியுள்ளனர். சில நேரங்களில் ஆளும் அரசு கொண்டுவரும் தீர்மானங்கள் மற்றும் விவாதங்களுக்கு எதிர்கட்சியினர் ஆதரவு அளித்த சம்பங்களும் உள்ளன. அதேநேரம், சட்டமன்றத்தில் விவாதங்கள், எதிர்ப்புகள் மட்டுமில்லாமல் சிரிப்பலைகள் ஏற்படும் சம்பங்களும் நிகழ்ந்து கவனத்தை ஈர்க்கும். 

அந்த வகையில் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பாஜகவினரின் சில கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் கிண்டலடித்து பதிலளித்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய நயினார் நாகேந்திரன், “ திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு வருவதற்கு எவ்வளவு பேருந்து கட்டணம் கொடுக்கிறார்களோ, அதே கட்டணத்தை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குள் வருவதற்கு கொடுக்க வேண்டியுள்ளது. பிராட்வேயில் இருந்து கோயம்பேட்டுக்கு சென்றோம். இப்போது, கிளாம்பாக்கத்துக்கு சென்றுள்ளோம். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து செங்கல்பட்டுக்கு பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம். இது மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப ஏற்படும் சூழ்நிலை. இதைத் தவிர்க்க முடியாது. தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்றிவிட்டால், குறைவான நேரத்தில் திருச்சிக்கு வந்துவிடலாம். போக்குவரத்து நெரிசல் உட்பட அனைத்தையும் தடுக்க முடியும்” என்றார். 

அவரின் பேச்சுக்கு உடனே பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், “ தலைநகர் சென்னையை திருச்சிக்கு மாற்ற நல்ல யோசனை சொல்கிறீர்கள். அப்படியே, தலைநகர் டெல்லியை சென்னைக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார். 

அடுத்ததாக பேசிய அமைச்சர் துரைமுருகன், “ தலைநகர் சென்னையை திருச்சிக்கு கொண்டு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதற்கு அது இங்கேயே இருக்கட்டும்” என்றார். 

அமைச்சர்களின் இந்த பேச்சுக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “ திருச்சியை தலைநகராக மாற்ற வேண்டும் என்பது மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் கோரிக்கை என்றார். 

இதற்கு மேல் பொறுக்க முடியாது என பேச ஆரம்பித்த சபாநாயகர் அப்பாவு, “ எம்ஜிஆர் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நினைத்தால் மாற்றியிருக்கலாம்” என்றார். 

இந்த விவாதங்களுக்கு இடையே, தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆதரிப்பதாக கூறியதும் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் புன்முறுவல் செய்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. 

சட்டமன்ற கூட்டத்தொடரின் 3வது நாளில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது தீர்மானங்களை கொண்டு வந்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும் என்றும் பேசினார்.

முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ள கவலையை பாஜக கொள்கிறது. அதனால், எந்த இடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமே அதனை புரிந்து கொண்டு தமிழக பாஜக நடவடிகை எடுக்கும் என்றார். 

உடனே பேசிய சபாநாயகர் அப்பாவு ஆதரவு.....என்றார். ...அப்போது பேசிய வானதி சீனிவாசன், அந்த வார்த்தை தான் வேண்டும் என்று கூற, சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. முதலமைச்சரும் முன்புறுவல் செய்தார். முதன் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளித்தது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News