கொடைகானாலும் கொள்ளை அழகும் !
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்துக்கு மேல் 7200 அடி உயரத்தில் உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி திண்டுக்கல் வரை தொடர்ந்து நிற்கும் மலை மேல் கொடைக்கானல் நகரம் அமைந்திருக்கிறது . இந்த மலைக்குன்று நகரம் மதுரையிலிருந்து வடமேற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கொடைக்கானலை அடைய மலைச்சாலை மட்டுமே உதவுகிறது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 165 சென்டிமீட்டர் மழை பெய்கிறது. கோடை காலத்திலும் குளிர்காலத்திலும் பெரும்பாலும் மாறாத பருவநிலை கொடைக்கானலில் நிலவுகிறது சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை உள்ள மாதங்கள் உகந்தவை ஆகும் கொடைக்கானலில் பிளம்ஸ் பழங்களும் புல்வெளிகளும் நிறைய செழித்து வளர்ந்துள்ளன. பலவித வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. நெடி துயர்ந்த மரங்கள் நிறைந்த மலைச்சாரலான கொடைக்கானலில் நடந்து சுற்றிப் பார்க்க உகந்த இயற்கை காட்சிகள் கண்ணை கவரும் வண்ணம் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கல்லாலும் மரத்தாலும் ஆன குடில்கள் பூந்தோட்டங்கள் மத்தியில் விளங்குகின்றன. கோகர் ஸ்வாக் பகுதி நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகள் நிறைந்தது இப்பாதையில் இருந்து தரைப்பகுதியை பார்த்தால் மிக அழகாக தோன்றும் செண்பகனூரில் பல்வேறு மலர் வகைகள் மலர்ந்திருக்கும் பூங்கா ஒன்று உள்ளது கொடைக்கானல் கோடை விழாவும் மலர்கண்காட்சியின் தமிழகத்தில் புகழ்பெற்ற விழாக்கள் ஆகும் ஆண்டுதோறும் மே திங்களில் பல நாள்களுக்கு சுற்றுலா விழாக்கள் ஏற்பாடு செய்து கலை நிகழ்ச்சிகளும் படகு போட்டிகளும் நடைபெறுகின்றன. கொடைக்கானல் மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி பூ பூக்கிறது இதனால் தமிழ் இலக்கியத்தில் இவ்வூர் குறிஞ்சிமலை என குறிப்பிடப்படுகிறது. இது செப்டம்பர் முதல் மார்ச் வரை பூக்கிறது மூன்றடி உயரத்திற்கு வளரும் பூச்செடியில் கொடைக்கானல் மலைப்பகுதி கண்கவர் காட்சியாய் விளங்கும் இது 4500 முதல் 6000 அடி வரை உயரம் உள்ள மலைப்பகுதியில் பூக்கும் கொடைக்கானல் பகுதியில் உயர்ந்த மலைகளில் காபியும் கோகோவும் கோதுமையும் பார்லியும் வெள்ளை பூண்டும் வால் பேரியும் காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றன. தாழ்ந்த மலைப் பகுதிகளில் உயர்ந்த ரகவாழை, காபி, ஏலம், இஞ்சி ,மஞ்சள் முதலியன பயிராகின்றன. பழவகைகளும் மா, பலா,ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை ப்ளம்ஸ் ,கொடி திராட்சை, ஆப்பிள் செர்ரி, ஆகியன பயிர் ஆகின்றன. மலைச்சரிவுகளில் நெல் சாகுபடி நடக்கிறது. இம்மலையில் குன்னுவர், புலையர், பளியர் ,முதுவர் மன்னாடியர் முதலிய இனத்தவர்கள் வாழ்கின்றனர். கிபி இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்க நூல்களில் கொடை மலையை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. கொடைக்கானலில் உள்ள கோல்ப் விளையாட்டு மைதானம் உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது கொடைக்கானல் சிறந்த சுற்றுலா மையமாக திகழ்ந்து வெளிநாட்டு உள்நாட்டு மக்களை பெரிதும் கவர்கிறது.