பவானியின் சிறப்புகள் !

Update: 2024-03-15 11:47 GMT

பவானி

தென்னாட்டில் ஈரோட்டில் பவானி முக்கூடல் மிக புகழ்பெற்று சிறந்து விளங்குகிறது. இந்த பவானி கூடுதுறையிலேயே சங்கமேஸ்வரர் திருக்கோயில் அமைந்து சிறப்புற்று விளங்குகின்றது. காவிரியும் பவானியும் கூடும் சங்கமத் துறையிலே இறைவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியதால் சங்கமேஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்று விளங்குகிறார். திரிவேணி சங்கமம் என்பதற்கு முக்கூடல் என்று பெயர் வடநாட்டில் கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்திற்கு பிரயாகை என்று பெயர் . பிரயாகையில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்பர் அதே மாதிரி நம்முடைய தென்னாட்டிலும் பிரயாகை உள்ளது தென்னாட்டில் உள்ள பிரயாகைக்கு பவானி என்று பெயர்.

காவிரியும் பவானி கலக்கும் இடத்திற்கு தட்சிண பிராயாகை என்று பெயர். இந்த சங்கமத்தில் மூழ்கி எழுந்தாலும் புண்ணியம் உண்டு வடக்கே கங்கையும் யமுனையும் கலக்கும் இடத்திலே சரஸ்வதி நதி அந்தர் வாகினியாக கலக்கின்றது .இம்மூன்று நதிகளும் ஒன்று கூடுவதால் இதற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர். அங்கு சரஸ்வதி அந்தர் வாகினியாக கலப்பது போலவே இங்கே காவிரியும் பவானி நதியும் கூடுதுறையிலே அமுத நதியும் கலப்பதால் இதனையும் திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள் .இந்த பவானிதலம் இதிகாச தலங்களிலும் இருந்ததாக அறிய முடிகிறது.அக் காலத்தில் பூமி யளந்த திருமால் இங்கு இறைவனை பூசித்த வரலாற்றை பிற்காலத்தில் தோன்றி இத்தலத்திற்கு பதிகம் பாடிய திருஞானசம்பந்தர் "பூமியளந்தானும் போற்ற மன்னி"என குறிப்பிட்டு உணர்த்துகிறார்.

வியாச முனிவர் இங்கு இறைவனை பூசித்து வழிபட்டதன் பயனாக வேதங்களை வகுக்கும் வல்லமை பெற்றார் என்றும் புராணம் கூறுகிறது குபேரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு பதவி பெற்றதால் இத்தலம் "அளகை "என்னும் பெயர் பெற்றது .பிரம்மன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் படைப்பு தொழிலில் சிறப்புற்றான் என்றும் விசுவாமித்திரர் இக்கூடலில் நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டதன் விளைவாக வசிட்டர் வாயினாலேயே 'பிரம்மரிஷி' என்று அழைக்கப் பெற்றதாகவும் வரலாறு உண்டு . உமாதேவியின் திருப்பெயர்கள் பலவற்றுள் பவானி என்பதும் உண்டு . எனவே இந்த பெயரே இத்தலத்து பெயராகவும் இங்கு உள்ள நதியின் பெயராகவும் அமைந்தது. இந்த பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உள்ளது. இதனை காயத்ரி மடு என்று கூறுகின்ற னர்.

Tags:    

Similar News