செயின்ட் ஜார்ஜ் கோட்டை!
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை என்ற பெருமையை இது பெற்றது . புனித ஓர் ஜார்ஜ் பிறந்த நாளான 1644 ஏப்ரல் 23-ஆம் தேதி கோட்டை தொடக்கம் கண்டதால் அவரின் பெயரையே கோட்டைக்கு வைத்து விட்டார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்கு வசதியான ஓர் இடம் கடற்கரையை ஒட்டி தேவைப்பட்டது ஆங்கிலேய வணிகரான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் என்ற இருவரும் சென்னை வந்தனர். இன்றைய ஜார்ஜ் கோட்டை இருக்குமிடம் அன்று பொட்டல்காடு .அந்த இடத்தை வாணிகம் நடத்த தேர்ந்தெடுத்தனர். அந்த இடம் விஜயநகர பேரரசின் கீழ் சந்திரகிரியை தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர் வேங்கட நாயகருக்கு சொந்தமானதாக இருந்தது. சிலர் இவரை சென்னப்ப நாயக்கர் என்றும் கூறுகிறார்கள். 1639 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிரான்சிஸ் டே மன்னரை சந்தித்து ஒரு கோட்டை கட்டவும், வாணிகம் செய்யவும் ஓர் உடன்படிக்கையை பெற்றார். அந்த உடன்படிக்கை படி மதராசபட்டினத்தில் ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டுவதற்கு முழு அதிகாரத்தையும் தந்தது. இக்கோட்டையின் மூலம் கிடைக்கும் சுங்க வருவாயில் பாதியை எடுத்துக் கொள்ளவும் சலுகை அளித்தது. மேலும், எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் ஆங்கிலேயர்கள் நாணயங்களை பார்த்து புழக்கத்தில் விடவும், முன் பணம் பெற்று ஏமாற்றியவர்கள், பொருளை பெற்று பணம் தராதவர்களை பிடித்துக் கொடுப்பதற்கும், ஆங்கிலேயர்கள் கொள்முதல் செய்யும் உணவு மற்றும் இதர அடிப்படை தேவை பொருள்களுக்கான சுங்கவரியினை தவிர்க்கவும் அதில் ஆணையிடப்பட்டிருந்தது. இதனால் ஆங்கிலேயர்கள் பெரும் நன்மை அடைந்தார்கள். கடுமையான நிதி நெருக்கடி, கம்பெனி பணத்தை தேவையில்லாமல் கோட்டை கட்ட செலவழிக்கிறார்கள். இது ஒரு வீண் செலவு என்ற மேலதிகாரிகளின் ஏச்சுகளை காதில் வாங்காமல் ஆங்கிலேய மதராஸ் வணிகர்கள் 13 ஆண்டுகள் மிகுந்த சிரமத்துடன் இந்த கோட்டையை கட்டி முடித்தார்கள் .