சிற்பங்கள் மிளிரும் மாமல்லபுரம் !
முதலாம் நரசிம்ம வர்ம மாமல்லன் நினைவாக கடற்கரை நகரம் மாமல்லபுரம் என்று அழைக்கப்பட்டது .பல்லவர் காலத்தில் இது முக்கிய வாணிக துறைமுகமாக விளங்கியது. இங்கே கடற்கரையில் ஏழு கோயில்கள் இருந்ததாக ஐரோப்பிய மாலூமிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .மாமல்லபுரத்தை காண வருபவர்கள் முதலில் பார்ப்பவை ஒரு பெரும் பாறையும் அதில் வடிக்கப்பட்டுள்ள அமர சிற்பங்களுமே. இந்த சிற்பத்தை அர்ஜுனன் தவம் என்கிறார்கள். 90 அடி நீளமும், 30 அடி உயரமும் உள்ள இந்தப் பாறை மதிலில் 150 சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன. தெய்வங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், நாகராஜன், நாககன்னிகை, முதலியவர்களையும், யானை, சிங்கம், சிறுத்தை, குரங்கு ,பூனை ,பறவைகள் இவற்றையும் உயிர் சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள். இந்தப் பாறையின் நடுவில் இயற்கையிலேயே அமைந்த இடைவெளி ஒன்று இருக்கிறது. இது இரண்டு பாகமாக பாறையை பிரிக்கிறது. வடக்கு பாகத்தில் சிவபிரானையும், தவக்கோலத்தில் நிற்கும் ஒருவரது சிற்ப உருவத்தையும் கீழே சிறு விஷ்ணு கோயில் ஒன்று இருப்பதையும் காணலாம். இடது பாகத்தில் உயிர் உள்ளவை போலவே தேவர்களும் தேவியரும் சிலையுறுவில் பொறிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ,மூவருக்கும் மூன்று கர்ப்ப கிருகங்கள், வடமேற்கில் மும்மூர்த்தி மண்டபம் உள்ளது. மும்மூர்த்தி மண்டபத்தில் இருந்து சிறிது தூரத்தில் கோடிக்கல் மண்டபம் இருக்கிறது. இவற்றை அடுத்து ஒரு பாறையில் துர்க்கை ஓர் எருமையின் தலையில் நிற்கும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது . தெற்கே உள்ள வராக குகை மண்டபத்தின் உட்பக்க சுவர் பாறையில் வராக சிற்பம், பூமியை கவர்ந்து சென்ற அரக்கன் கைகூப்பும் காட்சி, திருமால் வராக வடிவம் எடுத்து லட்சுமியை தாங்கி நிற்கும் காட்சி, தேவர்கள் வணங்கும் காட்சி, மகாபலியின் கருவத்தை அடக்கி உலகளந்த திருமாலின் சிற்பக்காட்சி இவைகள் காணத் தகுந்தவை. யானை, மான், குரங்கு, மயில், முதலிய சிற்பங்கள் இவையெல்லாம் பார்ப்பவரின் மனம் கவரும் காட்சிகள். மாமல்லபுரம் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும்.