அலைகள் ஓசை பாடும் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை!
வங்காள விரிகுடா கடலோரத்தில் உள்ள துறைமுக நகரமான தரங்கம்பாடி நாகப்பட்டினத்திற்கு 40 கிலோ மீட்டர் வடக்கேயும் மயிலாடுதுறைக்கு 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது தரங்கம் என்பது அலைகளைக் குறிக்கும் இவ்வூரில் கடல் அலைகள் ஓசை நயத்துடன் பாடிக் கொண்டு கரையை மோதுகிறதாம். அதனால் இவ்வூரை 'தரங்கம்பாடி 'என்று வழங்கினர் தரங்கம்பாடியில் 'டேனிஷ் கோட்டை 'காணத்தகுந்த இடமாகும் இது தமிழக கோட்டையிலிருந்து வேறுபட்டது. வெளிநாட்டு கட்டடக் கலையின் அழகை இதில் காணலாம். தென்னிந்தியாவில் கிறித்துவம் பரப்பும் தலைமை இடமாகவும் தரங்கம்பாடி இருந்தது. இங்கு இருந்து தான் புராட்டஸ் டன்ட் மதம் பரவியது சீகன் பால்கு என்ற ஜெர்மனியர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி தரங்கம்பாடியில் அச்சிட்டார் 1715-இல் புதிய ஏற்பாடு இங்குதான் அச்சிடப்பட்டுள்ளது. பழைய கட்டடங்கள் பாழடைந்துள்ள சின்னங்கள் டேனிஸ்காரரின் புகழ் பரப்பும் கோட்டை மசூதி கோயில்கள் பள்ளிக்கூடங்கள் ஆகியவை இவ்வூரின் தொன்மையை தெரிவிக்கின்றன.
டேனிஷ் கவர்னர் வாழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள உப்பள அலுவலகமும் டேனிஷ் தளபதியுடைய இல்லத்தின் கனத்த சுவர்களும் , டேன்ஸ் பர்க் கோட்டையின் கிழக்கு மதிலில் வைக்கப்பட்டுள்ள பழைய காலத்து துப்பாக்கியும்,கோட்டை அருகே கடலோரத்தில் சீகன் பால்கு நினைவுச் சின்னமும் தரங்கம்பாடியில் காணத்தக்கவை. 1624-ல் இக்கோட்டை டேனிஸ் கிழக்கு இந்திய கம்பெனியரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது. இக்கோட்டை நடுவே ஒரு முற்றம், சுற்றிலும் பல கட்டடங்கள், மதில்கள், மதில்களின் நான்கு மூலைகளிலும் காவல் அரண்கள் அவற்றை அடுத்து அகழிகள் என்ற அமைப்பில் ஐரோப்பாவிலுள்ள கோட்டைகளைப் போல கட்டப்பட்டிருக்கிறது.
கோட்டைக்குள் டேனிஷ் கவர்னரின் மாளிகையும் படைத்தலைவரின் மாளிகையும் வெடி மருந்து கிடங்கும் கிறித்துவ ஆலயங்களும் சுங்க அலுவலகமும் சிறைச்சாலையும் இருந்தன. அவர்களுடைய தேவைக்கேற்ப 1791 வரை பல தடவை இக்கோட்டை திருத்தி அமைக்கப்பட்டது. இந்த கோட்டை தற்போது தமிழ்நாட்டின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது இந்த அருங்காட்சியகம் அனைத்து நாட்களிலும் (வெள்ளிக்கிழமை தவிர )மற்ற நாட்களில் திறந்திருக்கும்.