மத்திய தொழிலாளா் நலன் அமைச்சா் இன்று நாமக்கல் வருகை
மத்திய இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே
மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைக்க மத்திய தொழிலாளா் நலன் அமைச்சா் ஷோபா கரந்தலஜே செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகிறாா். பிரதமரின் கிசான் சம்மான் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-ஆவது முறையாக உதவித்தொகைக்கான நிதி விடுவிக்கும் திட்டம், உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் மோடியால் இன்று (ஜூன் 18) செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்படுகிறது.
இதனையொட்டி, நாமக்கல் - துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளா் நலன், வேலைவாய்ப்புத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சா் ஷோபா கரந்தலஜே பங்கேற்று பேசுகிறாா். மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா். இந்த நிகழ்வின் போது, நாமக்கல் விவசாயிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் கலந்துரையாட உள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை மத்திய வேளாண்மை துறையுடன் இணைந்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் செய்துள்ளது. இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி மற்றும் ராஜேஷ்குமார் தங்களது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.