தறிகெட்டு ஓடிய ஜீப் 3 பேர் பலியான சம்பவம் - தப்பி ஓடிய ஓட்டுநர் கைது

திருச்சுழி அருகே சாலையில் தறிகெட்டு ஓடிய ஜீப் டீ கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி மூன்று பேர் பலியான சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(35). இவர் நேற்று தன் உறவினர்களான மதுரையைச் சேர்ந்த பழனிக்குமார்(27), நவீன் குமார்(21), ராகவ் கார்த்திக்(7) மற்றும் ஹரிஸ் சரவணன்(6) ஆகியோருடன் சாயல்குடி அருகே பெருநாழியில் உள்ள தனது உறவினர் இல்ல காதணி விழாவிற்கு மகேந்திரா ஜீப்பில் சென்றுள்ளார். ஜீப்பை கண்ணன் ஓட்டிச் சென்றுள்ளார்.

மேலும் காதணி விழாவை முடித்துவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பும் போது திருச்சுழி அருகே மண்டபசாலை பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள டீக்கடையின் முன்பு பொதுமக்கள் டீ குடித்துக் கொண்டிருந்தபோது மதுரை - வாலிநோக்கம் நெடுஞ்சாலையில் சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்ணன் ஓட்டி சென்ற மகேந்திரா ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியுள்ளனர். அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது ஜீப் மோதிய விபத்தில் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து (எ) பெருமாள் (வயது 54) மற்றும் விவசாயிகளான விஜயராமன் ( 53) மூக்கையா (50) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தப்பி ஓடிவர்களை உடனடியாக கைது செய்வோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து சமாதானமாகி சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் இறந்த ஒருவரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், மற்ற இருவரின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை விபத்து ஏற்படுத்தியவர் கைது செய்யப்படாததால் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தை தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய ஜீப் ஓட்டியவர் மதுரை வாழைத்தோப்பை சேர்ந்த கண்ணனை மதுரையில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை விசாரணைக்காக எம்.ரெட்டியபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story