ரேஷன் கடைகளில் பறக்கும் படை திடீர் ஆய்வு: ரூ. 5,575 அபராதம் வசூல்

ரேஷன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு ரூ. 5575 அபராதம் வசூல்
நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.5,575 அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை இணை பதிவாளருக்கு புகார்கள் வந்தனர். இதையொட்டி, ரேஷன் கடைகளை கண்காணிக்க, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தலைமையில், கூட்டுறவு சார் பதிவாளர்களைக் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டது. இந்த பறக்கும்படை அலுவலர்கள் மோகனூர் மற்றும் நாமக்கல் தாலுகா பகுதிகளில், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 76க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 33 ரேஷன் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறைவு மற்றும் அதிகம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையொட்டி சம்மந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு ரூ.5,575 அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் அடிக்கடி நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.