தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!!

ranya
பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகையான ரன்யா ராவ் (வயது 32). இவர் தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவர் கர்நாடக வீட்டுவசித்துறை இயக்குனரான டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகள் ஆவார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி இரவு துபாயில் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த போது, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, ரூ.4¾ கோடிக்கு தங்க நகைகள், பணம் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ரன்யா ராவிடம் விசாரணை நடத்தி விட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் அவரை அதிகாரிகள் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கில் ஜாமின் கோரி ரன்யா ராவும், இதே வழக்கில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பெங்களூரு பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது, அந்த மனுக்கள் மீதான விசாரணையை நேற்று நீதிபதி ஒத்திவைத்திருந்தார். அதன்படி, நேற்று நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதையொட்டி நடிகை ரன்யா ராவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி இருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதே நேரத்தில் ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான விசாரணையையும் வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ரன்யா ராவை காவலில் எடுத்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயில் இருந்து தங்கம் கடத்தி வருவதற்காக தன்னை சிலர் மிரட்டியதாக அவர் அதிகாரிகளிடம் கூறி இருந்தார். இதனால் மிரட்டல் விடுத்த நபர்கள் யார்? கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ரன்யா ராவ் யார், யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்து வந்தார் என்பதை கண்டுபிடிக்க, அவரது செல்போன், மடிக்கணினியையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ரன்யா ராவிடம் விசாரணை நடந்து வருவதால், இந்த வழக்கில் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் தங்கம் கடத்தலின் பின்னணியில் பெங்களூரு, ஆந்திராவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வாரிசுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் துபாயில் இருந்து இதுவரை எத்தனை கோடி ரூபாய்க்கு தங்கத்தை கடத்தி வந்தார்?, அவற்றை யாரிடம் எல்லாம் கொடுத்தார்? என்பதும் அம்பலமாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தங்கம் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கிடையில், கடந்த 6 மாதத்தில் 27 முறை நடிகை ரன்யா ராவ் துபாய்க்கு சென்று வந்திருப்பதாக கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சார்பில் ஆஜராகி இருந்த வக்கீல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.