பெஞ்சல் புயல்; புதுவையில் பலத்த காற்றுடன் மழை: கடற்கரை சாலை, சுற்றுலா தலங்கள் மூடல்!!

பெஞ்சல் புயல்; புதுவையில் பலத்த காற்றுடன் மழை: கடற்கரை சாலை, சுற்றுலா தலங்கள் மூடல்!!

Pondy beach

பெஞ்சல் புயல் கரையை கடக்க உள்ளதால் புதுவையில் கடற்கரை சாலை, சுற்றுலா தலங்கள் ஆகியவை மூடப்பட்டன.

புதுச்சேரியில் பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் காலை முதல் மழை பெய்து வருகிறது. வங்க கடலில் கடந்த 23ம் தேதி முதல் மையம் கொண்டு போக்கு காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து நேற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் எனவும் அப்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இன்று (30ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழையை எதிர்கொள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், புயல், கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற 121 முகாம்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. அரக்கோணத்தில் இருந்து 2 பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, புதுச்சேரி, காரைக்காலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆயிரம் போலீசார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை புயல் கரையை கடக்க உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் பலத்த காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. புயலையொட்டி புதுச்சேரியில் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. சுற்றுலா தலமான பாண்டி மெரினா, கடற்கரை சாலைகள் மூடப்பட்டன. அதேபோல், பாண்டி மெரினாவுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அதன் நுழைவு வாயில் சந்திப்பில் பேரிகார்டுகள் அமைத்து ஒதியஞ்சாலை போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, புயலின் தீவிரத்ைத உணர்த்தும் வகையில் நேற்று மாலை புதுச்சேரி துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரையையொட்டி உள்ள மீனவ கிராமங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன. மேலும் அந்த கிராமங்களில் விசைப்படகுகள், பைபர் படகுகள் அனைத்தும் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் பாண்டி மெரீனா சுற்றுலாதலத்துக்கு பொதுமக்கள் செல்லாதவாறு போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story