சபரிமலையில் பலத்த மழை: பக்தர்கள் பம்பை ஆற்றில் இறங்க தடை!!
pambai
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கேரள மாநிலத்திலும் பல மாவங்டங்களில் பலத்த மழை பெய்கிறது. நேற்று பல மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில் இன்று வயநாடு, கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் 204 மில்லிமிட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.மேலும் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, பத்தினம்திட்டா, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. அதிலும் சபரிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 2-வது நாளாக மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் மலை யேறிச் சென்றார்கள். மேலும் சன்னிதானத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்தபடி சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் நேற்றே தண்ணீர் வரத்து அதிக ரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் பம்பை ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்தை கண்காணிக்கும் பணியில் வருவாத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். கேரளாவில் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.மலைப்பாங்கான பகுதி களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதி மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.