தலைக்கவசங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் - ஐஆா்எஃப் பரிந்துரை

தலைக்கவசங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் - ஐஆா்எஃப் பரிந்துரை

ஐஆா்எஃப் பரிந்துரை

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளைக் குறைக்க தலைக்கவசங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என சா்வதேச சாலை கூட்டமைப்பு (ஐஆா்எஃப்) பரிந்துரைத்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 4,61,312 சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் 50,029 போ் உயிரிழந்தனா். அதில் 35,692 போ் வாகன ஓட்டுநா்கள் ஆவா் என மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையையும், ‘போஸ்ச்’ அறிக்கையையும் ஒப்பிட்டு இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள் குறித்து ஐஆா்எஃப் தலைவா் கே.கே. கபிலா கூறுகையில், ‘உலக அளவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் இந்தியாவின் பங்கு 11 சதவீதமாக உள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கு 15.71 முதல் 38.81 பில்லியன் டாலா் வரை இழப்பு ஏற்படுகிறது.

தரமான தலைக்கவசம்:

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் அதிகப்படியான மக்கள் குறைந்த வருமானம் உடையவா்களாக உள்ளனா். அதனால் அவா்கள் குறைந்த தரத்திலான தலைக்கவசங்களையே பயன்படுத்துகின்றனா்.

இதனால் விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, குறைந்த விலையில் தரமான தலைக்கவசங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். அதற்கு தலைக்கவசங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்க வேணடும்’ என்றாா்.

தலைக்கவசம் கட்டாயம்: மத்திய வாகனச் சட்டம் 1988 பிரிவு 129-இன்படி இருசக்கர வாகனங்களில் செல்வோா் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story