விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாஜி எல்ஐசி அதிகாரி தர்ணா
தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அதிகாரி
விழுப்புரம், ஜானகிபுரத்தை சேர்ந்தவர் ராயர். மாஜி எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரியான இவர் நேறறு காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.அப்போது அவர், விழுப்புரம் எல்.ஐ.சி., அலுவலகத்தில் கடந்த 1981ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகள் வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தேன்.
எல்.ஐ.சி.,யில் நடக்கும் முறைகேட்டால் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதை சுட்டிக்காட்டி, கடந்த 2018ல் ஜனாதிபதிக்கு புகார் அனுப்பினேன்.அதனையொட்டி, எல்.ஐ.சி., நிர்வாகம் என்மீது பொய் புகார் கூறி, பணி நீக்கம் செய்தது.
எனக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை பண பலன்களை கேட்டும், என் மீதான பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கோர்ட்டில் முறையிட்டேன். இதுகுறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், எல்.ஐ.சி., நிர்வாகம் காலம் கடத்தி வருவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
அங்கு வந்த தாலுகா போலீசார், இது போராட்டம் நடத்தும் இடமில்லை என எச்சரித்ததை தொடர்ந்து, வரும் 26ம் தேதி விழுப்புரம் எல்.ஐ.சி., அலுவலகம் முன் மவுன விரதப் போராட்டம் நடத்தப்போவதாக கலெக்டர் மற்றும் எஸ்.பி, அலுவலகங்களில் மனு அளித்துவிட்டு சென்றார்.