தனியார் மதுபான கூடத்தை அகற்ற கோரி பழங்குடியின மக்கள் மனு!
Coimbatore (south) King 24x7 |24 July 2024 2:05 PM GMT
உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருவதாக குற்றச்சாட்டு.
கோவை மாவட்டம் ஆனைகட்டி மலை பகுதியில் உள்ள தனியார் மதுப்பான கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கபட்டு செயல்பட்டு வருகிறது.இந்த கடையை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அங்கு மது அருந்தி தங்கள் சமூகத்தினர் பலர் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பேசிய தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் முருகவேலு கடந்த 2019ம் ஆண்டு தாங்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஆனைகட்டியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதாகவும் அந்த சமயத்தில் மாவட்ட நிர்வாகத்தினர் 23 கிலோமீட்டருக்கு அப்பால் தான் இந்த கடை நிறுவப்படும் என்று உறுதியளித்ததாக கூறினார்.இந்நிலையில் தற்போது ஆனைகட்டி பகுதியில் தனியார் மனமகிழ் மன்றம் துவக்கப்பட்டு உள்ளதாகவும் அங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அருந்தி கடந்த மூன்று மாதங்களில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். பழங்குடியின மக்கள் வசிக்கின்றன பகுதிகளில் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலில் இருப்பதாக கூறிய அவர் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பாரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் எங்கள் சமூகத்தினரை மது பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களது நிலங்களை அபகரிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் அரசு நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு அளித்து பழங்குடி இன மக்களின் நிலங்களை வாங்குவோ விற்கவோ கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி எங்கள் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவது இல்லை எனவும் நான்கு ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் குறித்து மனு அளித்து வருவதாகவும் ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என குற்றம் சாட்டியவர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் சமூகத்தினை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Next Story